Thursday, 29 November 2012

41. விற்கக்கூடாது



கையிலே காசும் இல்லை
கடன் கொடுப்பார் யாரும் இல்லை
பையில் உள்ள பைசா எல்லாம்
பஞ்சாய்ப் பறந்து போச்சே !
மீசை வைத்த முகத்தில் எங்கும்
மேகங்களாய் கவலைகள் சூழ
ஆசையுடன் கிப்டாய் வந்த
மோதிரத்தை உற்றுப் பார்த்தேன்

கல்யாணச் சந்தடியில் அன்று
சவரன் ஒன்றை இரண்டெனக் கூறி
மாப்பிள்ளை மக்கு என அறிந்து
மைத்துனன் இட்ட புண்நகை அதுதான்
இது நாள்வரை கழட்டாமல் இருந்து
இன்று நான் கழட்டுவதைப் பார்த்து
என் மனைவி பக்கத்தில் வந்து
எதற்கு அதை எடுக்கிறீர் என்றாள்

விற்கப் போறேன் சொல்லும் முன்னே
அண்ணன் ஞாபகம் அவளுக்கு வரவும்
பட்டென மோதிரத்தைப் பிடுங்கி
கட்அண்ட்ரைட்டாய் சொற்களை உதிர்த்தாள்
எந்த கஷ்டம் எப்படி வந்தாலும்
இந்த நகையை விற்கக் கூடாதாம்
அண்ணன் உருவம் கண்களில் மின்ன
அனுசரணையாய் கட்டளை இட்டாள்

அவளண்ணன் செய்த துரோகத்தை அறிந்து
அதை எப்படியாவது ஒழித்துக் கட்ட
பல நாளாய் சந்தர்ப்பம் தேடி
பகலிரவாய் திட்டம் போட்டேன்
ஒவ்வொரு முறையும் குறுக்கீடு செய்து
ஒருவழியாய் தடுத்தே வந்தாள்
இன்று என் திட்டம் பளிக்க
இறைவனை நான் நினைத்துக் கொண்டேன்

பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்
பெட்ரோல் போட்டு வண்டியை ஓட்டணும்
பத்து பைசாகூட பாக்கெட்டில் இல்லை
பணத்துக்கு நான் எங்கே போவேன்
எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தேன்
ஏற்பதாய் அவள் தெரியவில்லை
இதற்கு மேலே பிரஸ் பண்ணினால்
எங்கே சண்டை வந்துடுமோ என

மௌனமாய் நானும் நிற்க
மனைவி வந்து பாந்தமாய் பார்க்க
சாந்தமாய் ஹனிமொழி சொன்னாள்
சத்தியமாய் விற்கக்கூடாதென்றாள்
அன்பு மேலோங்க அவளை அணைத்து
ஆதரவாய் நானும் சொன்னேன்
அண்ணன் நினைவு மோதிரம் என்றும்
என்னுடனே இருக்கும் என்றேன்

விறுவிறுவென வீட்டைக் கடந்து
வெளியில் வந்து பணத்துக்கு அலைந்தேன்
அவனவன் என் அருகதை தெரிந்து
அட்ரஸ் தராமல் வீட்டை மாற்ற
போதும் போதுமென சலித்துப் போயி
பொறுமையாய் பார்க்கில் படுத்தேன்
பொறியாய் ஓர் எண்ணம் தட்ட
விருட்டென எழுந்து வேகத்தில் நடந்தேன்

பக்கத்தில் உள்ள பேங்குக் கிளையை
பாசமோடு மேலிட்டு நோக்கி
தயங்கியபடி உள்ளே நுழைந்து
தங்கக்கடன் கிடைக்குமா என்றேன்
தாராளமாய் கிடைக்கும் என்றதால்
மகிழ்ச்சி வெள்ளம் மனதினுள் பெருகி
பரவசமாய்பாடி மொழி காட்டி
பக்தியுடன் மேனேஜரைப் பார்த்தேன்

மோதிரத்தை வாங்கிக்கொண்டு
டோக்கனைத்தான் கையில் தந்து
கொஞ்ச வயது கோதை ஒருத்தி
கொஞ்ச நேரம் காக்கச் சொன்னாள்
பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டேன்
பேதை மனம் கதறக் கண்டேன்
மோதிரமில்லா கையைப் பார்த்தால்
மனைவி மனம் பதறுமோ பயந்தேன்

விற்கவில்லையைப் பல முறை கூறி
மன எழுச்சியை கட்டுப்படுத்தினேன்
மனைவி கேட்டால் சொல்லிக் கொள்ளலாம்
பேங்கில் நகை பத்திரமென்று
ஒரு மாதம் நீயும் பொறுத்தால்
உருப்படியாய் மீட்டுத் தருகிறேன்
பலவாறாய் கற்பனை செய்து
பதிலை நான் உறுதியாக்கினேன்

இப்படியாய் நினைவில் மூழ்க
இவன்தான் என இடிகுரல் கேட்க
இரண்டு போலீஸ் என்னை நோக்கி வந்து
நடடா ஸ்டேஷனுக் கென்றார்
வெலவெல வென வெலத்துப்போயி
விவரம் புரியாத நானும் முழிக்க
லாக்கப்பில் இரண்டு நாள் இருந்தால்
விவரம் தானே தெரியுமென்றார்

அப்பாவியாய் சொன்னதையெல்லாம்
நம்ப போலீஸ் நம்ப மறுத்து
கொடுத்த அடியால் கூர்மை பெற்ற அறிவு
தெள்ளத் தெளிவாய் விளக்கிச் சொன்னது
செய்த துரோகம் சிறிதில்லை என்றும்
சீர்வரிசையில் கோளாறு என்றும்
மனைவி சொன்ன விற்கக் கூடாதும்
மலை மலையாய் புரிய வைத்தது.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: