Thursday, 11 October 2012

38. நம்மைப் போல்


என் மனைவி ஜனனமெடுத்தது
சரியான ஒரு குக்கிராமத்தில்
தமிழ்நாட்டில் அதற்கு இணையாய்
இல்லவே இல்லைஎனச் சொல்லும்
கொல்லிமலைக் காடுகள் நிறைந்த
சேலம் மாவட்ட நெருப்பெரி பட்டியில்
சகோதரிகள் ஐந்து பேருமாய்
சகோதரர்கள் ஏழு பேருமாய்

கள்ளிப்பாலுக்கு தப்பிப் பிழைத்து
எல்லோரும் இளசாய் வளர
இவள்மட்டும் குறும்பு பிடித்து
கொஞ்சம் அதில் அழகாய் மிளிற
அழகாயிருந்தால் போதுமென நினைத்து
படிப்பைத்தான் பாதியில் விட
அழகுமட்டும் வாழ்க்கை எனக் கருதி
அவளை நான் கைப்பிடிக்க

சத்தியமாய் அவள் பிறந்த ஊரை
முன்னே நான் பார்த்திருந்தால்
ஜென்மத்துக்கும் அந்த ஊர்ப்பக்கம்
தலைவைத்துகூடப் படுத்திருக்கமாட்டேன்
போட்டோவைப் பார்த்த உடனே
“பொண்ணு பிடிச்சிருக்கு” சொல்ல
மாட்டிக்கிட்டார் மைனர்காளையென
பட்டென ஓர் முடிச்சும் போட்டார்

மணம் முடித்த மூனே நாளில்
மாமனார்வீட்டுக்கு நீண்டபயணம் செல்ல
வந்த ஓர் மாட்டுவண்டி
இட்டுக்கிட்டுப் போய் எங்களைச்சேர்க்க
வந்துவிட்டோமென நான் நினைத்து
கைகால் உதறி ரிலாக்ஸ் செய்ய
மாட்டுக்காரன் ரகசியம் சொன்னான்
மூனுமைல் இன்னும் நடக்கனுமென்று

அப்படியே ஓடிவிடலாமென
அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தால்
அகப்பட்ட கைதியைச் சுத்தி
அடிஎடுத்து வரும் போலீஸ் போல
சொந்தபந்தங்கள் எக்கச்சக்கமாய்
சுற்றிசுற்றி என்னைச்சூழ
நடையாய் நடத்தி என்னை
நடைபாதையின் பைத்தியமாக்க

இன்னும் ஒருமுறை இவ்வூர் வந்தால்
இளமை போய் முதுமை வருமென
எல்லாம் விதியென நினைத்து
மௌனத்துடன் நொந்துபோய் நடக்க
மாப்பிள்ளை பேசமாட்டாரா என
மச்சினச்சி இருவர் கிண்டலடிக்க
எல்லோரையும் ஏறெடுத்துப் பார்த்து
அரை மனதாய் புன்னகை பூக்க

ஒருவழியாய் மனத்தை தேத்தி
ஊட்டுக்குள் போக முயல
வயதான மாமனார் மாமியார்
ரம்மியமாய் ஆரத்தி எடுக்க
படுஎரிச்சலாய் உள்காயம் பட்டு
பத்தினியை நொந்துகொண்டேன்
பாவம் இவள் பிறக்காதிருந்தால்
எனக்கு இக்கதி நேராதென்று

எப்படியோ பொழுதைப் போக்கி
வீரப்பன்காட்டிலிருந்து தப்பியது போல
ஓரிரண்டு நாட்கள் அங்கே கழித்து
ஓடிவந்தேன் பேங்கை நோக்கி
மாதம் இரண்டு கழிந்த பின்னர்
மச்சினச்சிபால் இரக்கம் கொண்டு
மாமனார் போட்ட லெட்டரைப் படித்து
சேலத்தில் ஒருநாள் ஆஜர் ஆக

இருவருக்குமே திருமண நிச்சயம்
நடத்தப்பட்டதை நாங்கள் காண
வீட்டுக்குவரச்சொல்லி சொந்தபந்தங்கள்
விகாரமாய் வேண்டுகோள் விடுக்க
முடியவே முடியாதென மறுத்து
நான் போகும் நகரத்தைச்சொல்ல
அப்பாடா தப்பித்தோமென
அரைகுறை மகிழ்ச்சியில் அப்போ துள்ளி

பொண்ணு பார்த்த கதை எப்படிஎனப்
புது மாப்பிள்ளைகளிடம் சொல்லச் சொல்ல
பிறந்தஊரைப் பார்த்ததில்லை எனவும்
போட்டோ மட்டும்தான் பார்த்தோமெனவும்
வந்த நகைப்பை உள்ளே அடக்கி
நம்மைப்போல் ஆட்கள் உண்டென அறிந்து
நகரத்தில் நடத்தும் நிச்சயம் திருமணம்
சூட்சுமத்தை புரிந்து மீண்டும் சிரித்தேன்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

No comments:

Post a Comment