Wednesday, 27 June 2012

6. தலைவிதி


திருநெல்வேலிச் சீமையிலே
தென் காசிச் சந்தையில
பாக்குவெத்திலை போட்டுக்கிட்டு
பசு மாட்டை விலை பேச

சொன்ன விலை கூட என்று
சும்மா சும்மா நச்சரிக்க
சொல்லியதில் சரிபாதி
சட்டென்று நான் குறைக்க

 கிட்டியது லாபமென்று
கீழிருந்து மேலே எழ
வாங்குபவர் பணமுடிச்சு
வக்கணையாய் தானேவிழ

 அவசரமாய் ஓடிப்போய்
அள்ளி அள்ளி எடுத்தபின்னும்
சகுனத்தடை என்று சொல்லி
சம்மதத்தில் பின் வாங்கி

ஓடிப்போனார் வாங்காமல்
ஒருவார்த்தை சொல்லாமல்
தேடியே நான் சென்றேன்
திரும்பியே நான் வந்தேன்

போவோரை வருவோரை
பார்வையால் பின்தொடர்ந்து
வாங்குவாரா என்றெண்ணி
ஆவலுடன் நானிருந்தேன்

அடுத்ததொரு குள்ள ஆளு
அருகாமையில் வந்து நின்று
மாட்டுக்காம்பை உற்றுநோக்கி
மடி சிறிசு என்றுரைத்து

 சொற்பமாய் விலை கேட்க
“சூ” வென நான் முறைக்க
வந்தசுவடு தெரியாமல்
மறைந்துபோனார் கூட்டத்தில்

பொழுதெல்லாம் சாயச் சாய
பிழைக்கும் வழி தேயத் தேய
கஷ்டப்பட்டு திருடிவந்த
காமதேனை விரட்டிவிட

தேடி வந்த போலீஸ்
திடீரென்று என்னை மிரட்ட
காயப்பட்டேன் லாக்கப்பில்
கடிந்துகொண்டேன் தலைவிதியை.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: